Sunday, 29 November 2015

எளிய மனிதர்களின் படைப்பாளி – ராஜம் கிருஷ்ணன்


ராஜம்கிருஷ்ணன் ஏன் எழுத வந்தார்? ஒரு சனாதனக் குடும்பத்தில்
பிறந்து பள்ளிக்கல்விகூட கற்காத அவரை எழுதத் தூண்டியது எது? எழுதாமல் இருக்க இயலாது என்ற ஆதங்கத்தை அவருக்குள் உருவாக்கிய காரணி என்ன? என்றெல்லாம் யோசிக்கும்போது தமிழ்க் கவி ஆண்டாளை எது வீதிக்கு வந்து பாடத் தூண்டியதோ அதுதான் என்றே தோன்றுகிறது.
எழுத்தாளர் அம்பை பற்றி வண்ண நிலவன் குறிப்பிடும்போது “அவ்வையார், ஆண்டாளுக்குப் பிறகு அம்பைதாம்யா தமிழில் எழுத வந்திருக்காங்க” என்று கூறியதாக எனது இணையர் அப்பணசாமி அடிக்கடி கூறுவார். என்னைக் கேட்டால் அம்பைக்கு முன்பே எழுத வந்த ஆண்டாள் ராஜம் கிருஷ்ணன் என்பேன்.  

ஆண்டாளாக இருந்தாலும் ராஜம் கிருஷ்ணனாக இருந்தாலும் தங்களின் உடல் மற்றும் மனங்களின் மீது இந்த சமூகத்தால் செலுத்தப்படும் வன்முறைக்கு எதிராக, சனாதன ஆதிக்கத்துக்கு எதிராக எழுந்த கோபமே அவர்களுக்குள் எழுத்தாகச் செயல்பட்டது. ராஜம் கிருஷ்ணன் எழுத்துகள் அனைத்துமே உடலாலும் மனத்தாலும் உழைப்பாலும் சாதியாலும் மதத்தாலும் நிறத்தாலும் சுரண்டலுக்கும் வன்முறைக்கும் உள்ளான பெண் குரல்களின் தொகுப்பு எனலாம். குழந்தைத் தொழிலாளிகளின் அவலத்தை வெளிக் கொணர்ந்ததுடன் கொத்தடிமைக் கூலி முறைக்கு எதிராகவும் எழுதியுள்ளார்.

ஆசாரம் மிக்க சனாதனக் குடும்பத்தில் முசிறியில் பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன். அதுவும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழக பார்ப்பனக் குடும்பங்களில் ஆசாரம் என்ற பெயரில் நிலவிய மூட நம்பிக்கைகளுக்கும் கட்டுப்பெட்டித்தனங்களுக்கும் அளவே இல்லை. கையெழுத்துப் போடும் அளவுக்கு மேல் அவளுக்குப் பள்ளி செல்ல உரிமையில்லை. உள்கூடத்தைத் தாண்டி வெளிக்கூடத்தில் அவள் நிழல் கூட விழக்கூடாது. இப்படி ஒரு குடும்பத்தில் பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன். அவரது சகோதரர்கள் படித்து நல்ல வேலைகளில் அமர்ந்தபோதும் அவர் பள்ளி செல்ல அனுமதிக்கப்படவில்லை. பூப்படையும் முன்பே திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
புகுந்த வீடும் மிகப் பெரிய கூட்டுக் குடும்பம். முதுகெலும்பை முறிக்கும் வீட்டு வேலைகளுக்கு நடுவில் ஒரே ஆசுவாசம் வீட்டுக்கு வரும் பத்திரிகைகள் மட்டுமே. நல்லவேளையாக அவரது கணவர் கிருஷ்ணன் பத்தாம்பசலியாக இல்லை.. அதனால் திருமணத்துக்குப் பிறகு ராஜம் கிருஷ்ணனால் வெளிக்காற்றைச் சற்றே சுவாசிக்க முடிந்தது. வீட்டுக்கு வரும் இதழ்களை வாசிக்க அனுமதிக்கப்பட்டார். புதிய சிந்தனைகள் அவருள் உருவாயின. அவரது சிந்தனைகளுக்கு கிருஷ்ணன் குறுக்கே நிற்கவில்லை. தனது சிந்தனையால் எழுந்த ரௌத்திரத்தை எழுதத் தொடங்கினார். புனைவு, அபுனைவு என இரு வகைகளிலும் தனது குரலை அழுத்தமாகப் பதிவு செய்தார்.

நாவல், சிறுகதை, கட்டுரை, ’மித்ரா’ என்ற பெயரில் மொழிபெயர்ப்புகள்,  சிறுவர்களுக்கான படைப்புகள் என்று அனைத்துத் தளத்திலும் இயங்கியவர். அவரது பெரும்பாலான படைப்புகள் அடித்தட்டு மக்களான பழங்குடியினர், தலித் விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், உப்பளத் தொழிலாளர்கள், சிறிய விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் ஆகியோரின் அவல வாழ்க்கையை வெளிச்சமிட்டுக் காட்டுபவை.

மைய நீரோட்டத்தில் இருந்து விலக்கப்பட்டவர்களாகவும் விலகியவர்களாகவும் உள்ள எளிய மக்களின் வாழ்க்கையை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்னும் சமூகக் கண்ணோட்டம் கொண்டவர்களாலேயே இத்தகைய  முன்முயற்சிகளை மேற்கொள்ள இயலும். இந்தியாவில் இத்தகைய ஆய்வு நோக்கில் எழுதிய முக்கிய நாவலாசிரியராக வங்க மொழியில் எழுதி வரும் மகாஸ்வேதா தேவியைக் குறிப்பிடலாம். தமிழ் இலக்கியமும் அத்தகைய அற்புத நோக்கம் கொண்டவரைப் பெற்றிருந்தது என்றால், அப்படியான ஒரு முறையைத் தொடங்கி வெற்றி பெற்ற எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன் மட்டுமே.

இன்று வட்டார இலக்கியங்களும் தலித்திய பெண்ணிய விளிம்புநிலை மக்களுக்கான இலக்கியங்களும் இதைத்தான் முன்வைத்து எழுதப்படுகின்றன. அப்படியானால் அடித்தட்டு மக்களுக்கான இலக்கியம் குறித்த ஒரு முன்னோடிப்பார்வை அவரிடம் இருந்தது. அதையொட்டியே அவர் படைப்புகளைத் தேர்வு செய்துள்ளார். இதற்கான தேடலாகவும், படைப்புகளாகவுமே அவரது பயணம் இருந்துள்ளது.

உதாரணத்துக்கு இடிந்தகரை, மணப்பாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அரிய சுறா மீன்களை அதிகம் கொண்ட பகுதி, இதன் இறக்கையும் வாலும் துவி என அழைக்கப்படுகின்றன; இது விலை உயர்ந்தது; அப்பகுதியில் வாழ்ந்த மீனவர்களின் இழி நிலையைப் பயன்படுத்திக் கொள்ள தேவாலயங்கள் முன்வந்த கதையையும், கழிவுப்பொருள் என்ற பெயரில் துவியைப் பெற்று தேவாலயங்கள் ஏற்றுமதி செய்து பணமாக்கிக் கொண்டு மீனவர்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும் 1970களிலேயே தமது ‘அலைவாய்க்கரையில்‘ நாவலில் போட்டுடைக்கிறார்.  மீனவ மக்களுக்கும் தேவாலயங்களுக்கும் இடையே ஏற்படும் துவி பங்கு தொடர்பான பிரச்சனையை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ்., சங்கப் பரிவாரங்கள் அங்கு நுழைந்து அவர்களை மதமாற்றம் செய்து அவர்களிடையே கலவரமேற்படுத்த முயல்வது குறித்தும் கூறிச் செல்லும் இந்த நாவல் 1960களில் அப்பகுதியில் நிகழ்ந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது.

இதேபோல, தூத்துக்குடி மீனவர்கள் வாழ்க்கையை உப்பளத் தொழில் பின்னணியில் ‘கரிப்பு மணிகள்‘ என்ற தலைப்பில் நாவலாக எழுதியுள்ளார். நீலகிரி மலைப்பகுதியில் வாழும் படகர் இன மக்களின் வாழ்க்கை முறை குறித்து நீண்ட ஆய்வுக்குப் பின் எழுதப்பட்ட நாவல் குறிஞ்சித்தேன். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து ஐந்து குறிஞ்சிப் பருவங்களில், அதாவது அறுபது ஆண்டுகளில், படுகர் இன மக்கள் எவ்வாறு தமது பாரம்பரிய விவசாய முறைகளைக் கைவிட்டுப் பணப்பயிரான தேயிலை விவசாயத்துக்கு மாறுகிறார்கள் என்பதைக் கூறிச் செல்கிறது. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழும் மலைவாழ் மக்கள் அதிகபட்சமாக தினை, சாமை, வரகு, கிழங்குகள் போன்றவற்றை மட்டுமே பயிரிட்டு மலை வளத்தையும், வன வளத்தையுமே பன்னெடுங்காலம் தமது வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்ததையும்,  நவீன வாழ்க்கை முறை தரும் நெருக்கடிகளால் உந்தப்பட்டு பாரம்பரிய விவசாய முறையைக் கைவிட்டு தங்கள் சிறு நிலங்களில் தேயிலை பயிரிட நேரும் அவலத்தையும் பொருளாதார வாழ்வியலுடன் அது அவர்களது பண்பாட்டு வாழ்க்கையிலும் மாற்றங்களை உருவாக்குவதை 1960களின் தொடக்கத்திலேயே பதிவு செய்துள்ளார்.

‘வேருக்கு நீர்‘ நாவல் இராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றுத் தந்தது. தனது கணவரின் பணியிட நிமித்தமாகவும், நாவல்களுக்கான களங்களையும் தேடிய அவரது பயணங்கள் அவரது அரசியல் பார்வையையும் பாதித்துள்ளது. குறிப்பாக, கோவா விடுதலைப் போராட்டம் குறித்து அறிவதற்கான தேடலில் ஈடுபட்டபோது (வளைக்கரம் நாவல்)அஹிம்சையால்தான் நாடு விடுதலை அடைந்தது என்ற கூற்று அவருக்கு முழுமையாகப் படவில்லை. நாட்டு விடுதலையில் ஆயுதங்களுக்கும் வன்முறைக்கும் பங்கு இருந்ததை உணர்கிறார். மேலும் பல பகுதிகளில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களிலும் ஆயுதங்களும் வன்முறையும் முக்கியப் பங்காற்றியதை உணர்கிறார். விடுதலைக்குப் பின்னர் 1960களில் பீகாரிலும், மேற்கு வங்கத்திலும் பயணம் மேற்கொண்டபோது அங்கு அரசியலில் வன்முறை தொடர்ந்து நீடிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். இப் பின்னணியில் உண்மையான சத்தியாக்கிரகம் என்பது என்ன? காந்தியடிகள் கூறிய அஹிம்சை வழி என்பது கைகூடாத கனவா என்ற சுய ஆய்வே ‘வேருக்கு நீர்‘ நாவலாக வெளிப்பட்டது.

’யாதுமாகி நின்றாய்’, ’காலந்தோறும் பெண்’, ’காலந்தோறும் பெண்மை’, ’உயிர் விளையும் நிலங்கள்’, ’இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை’ ஆகிய நூல்கள் ராஜம் கிருஷ்ணனின் புனைவு சாராத எழுத்துகளில் முக்கியமானவை. குறிப்பாக அவரது அபுனைவு எழுத்துகளைத் தொகுத்து நோக்கும்போது தமிழ்நாட்டில் ஒரு பெண் தனது நிலை, உரிமைகள் பற்றி அறிதலுக்கான கல்வியூட்டலாகத் தெரிகிறது. இதெல்லாம் நம் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனத் தேடித் தேடி எழுதினார்.
வாழ்க்கையைச் சவாலாக எடுத்துக்கொண்டு போராடி வென்ற, தான் மதிக்கும், உண்மையிலேயே சமூகத்துக்குத் தங்கள் பங்களிப்பை நல்கிய பல துறைப் பெண் சாதனையாளர்களான காவல்துறை உயர் அதிகாரி ஜி. திலகவதி, தமிழகத்தின் முதல் பொறியாளர் மே ஜார்ஜ், கல்வியாளர் வசந்திதேவி, திரைப்பட நடிகை ஸ்ரீவித்யா, டிரையத்லான் அமுதா மற்றும் பல சாதனைப் பெண்களை நேரில் சந்தித்து ஒரு தேர்ந்த பத்திரிகையாளரைப் போல நேர்காணல் செய்து ‘யாதுமாகி நின்றாய்’ என நூலாகவே எழுதினார்.

பெண்ணை அடிமைப்படுத்த காலந்தோறும் ஏராளமான கட்டுக்கதைகள் புனையப்படுகின்றன. புதிய காலத்தில் பழைய விலங்குகள் அகற்றப்பட்டால் மீண்டும் புதிய விலங்குகளை ஆண் சமூகம் அதனினும் வலுவாகப் பூட்டுகிறது. பெண்ணை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் கட்டுக்கதைகள், மூட நம்பிக்கைகள், பழக்க- வழக்கம் என்ற பெயரில் பின்பற்றப்படும் பத்தாம் பசலித்தனமான நம்பிக்கைகள் ஆகியவற்றை உடைத்தழிக்க வேண்டிய அவசியம் குறித்து காலந்தோறும் பெண், காலந்தோறும் பெண்மை, இந்திய சமூக வரலாற்றில் பெண்மை ஆகிய நூல்களில் எழுதினார். அவரது கட்டுரைத் தொகுப்புகளில் மிகவும் குறிப்பிட வேண்டிய புத்தகம் – ’உயிர் விளையும் நிலங்கள்’ ஆகும். நவீன அறிவியல் உலகம் பெண் உடல் மீது செலுத்திய மிக மோசமான வன்முறை கருத்தடை முறை ஆகும். காட்டுமிராண்டித்தனமான முறையில் ஆண் சமூகம் கருத்தடையைப் பெண்களுக்கே நிர்பந்தப்படுத்துகிறது. இதற்கு எதிரான விழிப்புணர்வு வளர்ந்த நாடுகளில் காணப்படுகின்றன. இது குறித்த புத்தகங்கள் அவசியம் பெண்களிடம் இருக்க வேண்டும் என அங்கு வலியுறுத்தப்படுகின்றன. ஆனால் தமிழில் அத்தகைய ஒரு புத்தகத்தை எழுதியவர் ராஜம் கிருஷ்ணன்.
சமீபத்தில்கூட பின் தங்கிய வட மாநிலம் ஒன்றில் சுகாதாரமற்ற சூழலில் கருத்தடை செய்து வைக்கப்பட்ட பெண்கள் கொத்தாக மரணமடைந்த செய்தி இடியாகத் தாக்கியது. கருத்தடை சாதனத்தை ஆண்கள் பயன்படுத்துவதுதான் எளிதானது. ஆனால் விதம் விதமான கருத்தடைச் சாதனங்கள், கருத்தடை முறைகள் பெண் உடலில் திணிக்கப்படுகிறது. இல்லாவிட்டால் கருச்சிதைவு எனும் கொடுமையைப் பெண்கள் சந்திக்க வேண்டும். இது குறித்த புரிதல் மட்டுமல்ல, அதை எதிர்த்துப் போராடும் விழிப்புணர்வையூட்டும் புத்தகம் ‘உயிர் விளையும் நிலங்கள்’.  கடலைப் போல, இந்த பூமியைப் போல, ஆகாயத்தைப் போல பெண் உடல் என்பதும் உயிர் விளையும் ஊற்று என்பதை உணர்த்தும் இப் புத்தகம் பெண்களிடம் கூட போதிய வரவேற்பும் ஆதரவும் பெறாதது வருத்தத்துக்குரியதாகும். என்னைக்கேட்டால் இந்த ஐந்து புத்தகங்களும் பதின்ம வயதைக் கடக்கும் ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்க வேண்டும் என்பேன்.

அவரது இறுதிநாட்கள் ஒரு சமூகப்போராளிக்கான இறுதி நாட்களாக இல்லை. அவருக்கு தன் நிலை மீது எந்தவிதமான பச்சாதாபமும் இருந்தில்லை. என்றாலும் கடைசி ஆண்டுகளை தனிமையில்தான் கழித்தார். தானே முதியோர் இல்லத்தில் சேர்ந்தது போரூர் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தது போன்றவை வாழ்வின் போக்குகளை அவர் எவ்வாறு யதார்த்தமாக எடுத்துக்கொண்டார் என்பதைக் காட்டினாலும் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுது கதறிய தருணங்களும் இருந்தன.

ராஜம்கிருஷ்ணனின் வாழ்வைப் புரட்டிப்போட்டது கணவர் கிருஷ்ணனின் மரணம்தான். கிட்டத்தட்ட முதுமைநிலை அடைந்துவிட்ட ராஜம்கிருஷ்ணன் தனது ஒரே ஆதரவான கிருஷ்ணன் மறைவால் திக்குத்தெரியாமல் தவித்தார். தன் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கள ஆய்வுகளிலும் பெண் உரிமைக்கான மாநாடுகள், பேரணிகள், ஆய்வுக் கட்டுரைகள் என  கழித்து வந்திருந்த போதிலும் அவருக்குத் திடீர்த் தனிமை உணர்வு கவ்வ என்ன காரணம் என்பது விளங்காத போதிலும் எனக்குத் தெரிந்து இரண்டு விஷயங்கள் புரிகிறது. கணவர் மறைவுக்குப் பிறகு பங்களா போன்ற வீடு தேவையில்லை என அதனை விற்று கணவரின் உறவினர் ஒருவரின் பொறுப்பில் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்திருந்தார். ஆனால் அந்த உறவினர் மொத்தத்தையும் சுருட்டிக் கொண்டார். ஆழ்வார்பேட்டையில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைத்தளத்தில் வாடகைக்குக் குடியிருந்தார். அப்போது நானும் கவிஞர் இளம்பிறையும் அதே பகுதியில் குடியிருந்தோம்.  அப்போதே அவருக்கு நடப்பதில் சிரமம் இருந்தது. அவரது குடியிருப்பின் திறந்தவெளிப் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்ள எங்கள் உதவியை எதிர்பார்த்து அழைப்பார். நாங்களும் முறை வைத்துக்கொண்டு நடைப்பயிற்சிக்கு உதவுவோம். நிறைய பேசுவார். தானே காபி கலந்து உபசரிப்பார். அடிக்கடி அழைத்துப் பேசிக் கொண்டிருப்பார். இன்னமும் பெண்கள் பற்றி நிறைய எழுத இருக்கிறது என்பார். அப்போது நான் ஆசிரியப் பொறுப்பில் இருந்த இதழில் ’காவேரி’ என்ற பெயரில் பல கட்டுரைகள் எழுதினார்.

அச் சமயத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தொலைபேசியில் அழைத்தார். உடனே வரும்படி கூறினார். குரலில் பதற்றம் இருந்தது. அவசரமாக ஓடினேன். வீட்டுக்குத் தண்ணீர் கேன் போடும் சிறுவன் (15 அல்லது 16 வயது இருக்கலாம்.) கேன் சீல் உடைக்க கத்தி கேட்டிருக்கிறான். இவரும் எடுத்துக் கொடுத்திருக்கிறார். உடனே, அதை வாங்கி இவரின் கழுத்துக்குத் திருப்பி ‘இப்படியே உன்னைக் குத்தட்டுமா?’ என ’விளையாட்டாக’க் கேட்டிருக்கிறான்.அந்த நொடியில் தன் தனிமையை எண்ணி அதிர்ந்து போயிருக்கிறார். உண்மையில் அக்கணத்தை அவரால் ஜீரணிக்க இயலவில்லை. நானும் அக் கடைக்குச் சென்று முதலாளியைப் பார்த்துப் பேசி, அச் சிறுவனையும் எச்சரித்துவிட்டு வந்தேன். இந்தச் சம்பவத்தை வைத்து ஒரு சிறுகதை எழுதி, ’தினமணி கதிர்’ வார இணைப்பில் அது வெளியானது. இந்த நிகழ்வே முதியோர் இல்லத்தில் சேரும் அவரது முடிவுக்குக் காரணமாகயிருக்கலாம். விரைவில், எனது உடல்நிலை நலிவு மற்றும் அறுவைசிகிச்சை காரணமாக வீட்டைக் காலி செய்து அம்பத்தூர் செல்ல நேர்ந்ததால் அவரைத் தொடர்ந்து சந்திக்க இயலவில்லை. அவரும் திருவான்மியூர் பகுதிக்கு வீட்டை மாற்றிக்கொண்டார். அவ்வப்போது தொலைபேசியில் பேசிக் கொள்வோம். மீண்டும், என் தாத்தா திருவைகாவூர் கோ. பிச்சை மொழிபெயர்த்த சிறுகதைகள் தொகுப்புக்கு அணிந்துரை வேண்டி, தாத்தா, பாட்டி இவர்களுடன் திருவான்மியூர் வீட்டில் அவரைச் சந்தித்தேன். அப்போது மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார். அணிந்துரையும் அளித்தார்.

அதன் பிறகு, கடந்த ஆண்டு, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நான், அம்பை, கிருஷாங்கினி மூவரும் அவரைச் சந்தித்தோம். அவரால் பேச இயலவில்லை. ஈனசுரமாகத்தான் குரல் வந்தது. ஆனால் எல்லோரையும் அடையாளம் கண்டு பெயர்களைக் குறிப்பிட்டார். ‘உங்க எழுத்தைப் பற்றி ஒரு நல்ல கட்டுரை எழுதியிருக்கா’ என்று கிருஷாங்கினி என்னைக் குறிப்பிட்டதும் அந்தப் பத்திரிகையை வாங்கித் தடவிப் பார்த்த கணத்தில் அவரது கண்களில் மின்னலும் மகிழ்வும் தென்பட்டது.

ராஜம் கிருஷ்ணனைப் பற்றி அடிக்கடி நலம் விசாரிப்பவர் சின்னக்குத்தூசி அவர்கள். அப்போது மந்தைவெளியில் குடியிருந்ததால் வாரத்தில் மூன்று நாட்கள் அவரைச் சந்திப்போம். அப்போதெல்லாம் மறக்காமல் விசாரிப்பார். அதேபோல ராஜம் கிருஷ்ணனிடம் பேசும்போது தவறாமல் சின்னக்குத்தூசி பற்றி விசாரிப்பார். சின்னக்குத்தூசியை ‘குத்தூஸ்’ என்றே அழைப்பார். ’பாதையில் பதிந்த அடிகள்’ நாவலில் மணலூர் மணியம்மா பற்றி எழுதுவதற்கு ஏராளமான தகவல்கள் அளித்து உதவினார் என்பார். மணலூர் மணியம்மாவிடம் சின்னக்குத்தூசி உதவியாளராகப் பணியாற்றியவர். மணலூர் மணியம்மையார் பற்றிய தகவல்கள் கோரி ராஜம்கிருஷ்ணன் சின்னக்குத்தூசியை சந்திக்க வந்தது பற்றி சுவாரசியமாக விவரிப்பார். ’நான் மணியம்மா பத்தி எனக்குத் தெரிஞ்ச தகவலச் சொன்னேன். அப்புறம் விஸ்வநாதன்னு சிஐடியூ ஆபிசில் இருந்தார். அவரையும் பார்க்கச் சொல்லி அனுப்பினேன்” என்று கூறும்போது ராஜம் கிருஷ்ணன் வந்தது முதல் காட்சிகளை அப்படியே விவரித்துக் காட்டுவார். தஞ்சைப் பகுதியில் நிலப்பிரபுத்துவக் கொடுமைகளை எதிர்த்துப் போராடி மக்கள் மனங்களில் நீங்காது வாழ்ந்தபோதும் மணியம்மா குறித்த ஒரு புகைப்படம் கூட கிடையாது. அவர் உருவம் எப்படி இருக்கும், நடை உடை பாவனைகள் எப்படி இருக்கும் என்பது குறித்தெல்லாம் சின்னக்குத்தூசியாரைச் சந்திக்கும் வரை ஒரு தெளிவில்லாத சித்திரமே இருந்தது. மணியம்மாவின் உருவம், நடை, உடை, பாவனைகள் குறித்து அவர் அளித்த தகவல்களே இன்று மணியம்மாவாக ராஜம் கிருஷ்ணன் எழுத்திலும் நம் மனத்திலும் பதிந்துள்ளது என்றால் மிகையாகாது.

மேலும் ராஜம் கிருஷ்ணன் நூல்களை நாட்டுடையாக்குவதன் மூலம் அவருக்கு கணிசமான தொகை கிடைக்கும் என்பதால் அதற்குப் பெரு முயற்சி எடுத்தவர் சின்னக்குத்தூசி. இரண்டு முறை இவ்வாறு முயற்சி எடுத்துக்கொண்டார். முதல் முயற்சி தோல்வியடைந்தது நிறையப் பேருக்குத் தெரியாது. இரண்டாவது முயற்சியே பலன் தந்தது.
ராஜம் கிருஷ்ணன் தொண்ணூறு ஆண்டுகள் பெருவாழ்வு வாழ்ந்துதான் மறைந்தார். அவர் தீவிரமான படைப்பியக்கத்தில் ஈடுபட்ட காலத்தில் பொதுவாக எழுத்தாளர்கள் சந்திக்க நேரும் எந்த அவலத்தையும் சந்திக்கவில்லை. அதற்கு அவரது கணவர் கிருஷ்ணனின் ஆதரவு ஒரு காரணம். ஒவ்வொரு படைப்பையும் திட்டமிட்டு உருவாக்கினார். அதற்காகப் பெரும் ஆய்வுகளும் பயணங்களும் மேற்கொண்டார். இதற்கான ஆதரவும் தரவுகளைத் தொகுப்பதற்கான உதவியும் ஆங்காங்கிருந்த இடதுசாரிகள் மற்றும் முற்போக்காளர்களிடமிருந்து அவருக்குக் கிடைத்துக் கொண்டுதான் இருந்தன.

அவர் ஒரு இடதுசாரி ஆதரவாளராக அறியப்பட்டாலும் பல பிரச்சனைகளில் குறிப்பாக பெண்ணிய உரிமைகளுக்கு வழங்கும் முக்கியத்துவம், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு அகியவற்றில் ராஜம் கிருஷ்ணன் கொண்டிருந்த சமரசமற்ற தன்மையால் இடதுசாரி கட்சிகள் மீதான தமது விமர்சனத்தையும் முன்வைக்க அவர் தயங்கியதில்லை.
இருந்தாலும் கடைசிக்காலத்தில் அவர் சந்தித்த தனிமையும் துக்கமும் சமூகப்போராளிகள் இங்கு தொடர்ந்து சந்தித்து வரும் துயரம்தான்!

அம்ருதா ஜனவரி, 2015

Saturday, 28 November 2015

இயற்கையின் விளைபொருளே மனிதன்….. !




நேபாளத்தில் கோரத் தாண்டவமும் வட இந்தியா, கிழக்குப் பகுதி, மேற்குப் பகுதிகளில் ஆங்கார நடனமும், தமிழகத்தில் மிக மெல்லிதாய் ஒய்யார நடனம் என்று ஆட்டம் போடுகிறாள் பூமித்தாய். நம் எல்லோரின் மனங்களும் ஆட்டம் காணத் தொடங்கி விட்டன. இங்குதான் சித்தர்களின் ’ஒரு பிடி மண்’ தத்துவம் மேலோங்கி எழுகிறது. அறிவியல் வளர்ந்திராத காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் கூட, ‘எல்லாமும் ஒரு பிடி மண்ணுக்குள் அடக்கம்’ என்று தலையிலடித்துச் சொன்னார்கள்.

சகலமும் சூனியத்திலிருந்துதான் பிறக்கிறது என்று ஒற்றை வடிவம் காணும் ஆன்மிக வாதமா அறிவியல்? பிளாஸ்டிக் தயாரிப்பின் கோடரி முனையில் ஏராளமான மரங்களல்லவா வெட்டப்படுகின்றன? வெட்டிப் போடப்பட்ட பச்சை மரங்களின் அழுகலில் தொழில் நுட்ப உரமிட்டு வளர்த்தெடுக்கப்படுபவையே பிளாஸ்டிக் பூக்கள்.

பூமி மனிதனின் தாய் கிரகம். அன்னமிட்டு அன்பைப் பொழிந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்த் தன்னை வளர்த்த பூமித்தாயைப் புறக்கணித்து விட்டு, இரும்பு தரித்த செயற்கை கிரகங்களின் மேல் அளப்பரிய நேச பாசம் வைத்திருப்பவனை எப்படி சக மனிதனாய் ஏற்க இயலும்?
”பூமி மனித குலத்தின் தொட்டில். ஆனால், மனிதன் அவனது தொட்டிலிலேயே நீண்ட நெடுங்காலத்துக்கு இருந்து விட மாட்டான்” என ருஷ்ய அறிஞனான கான்ஸ்ட்வோவ்ஸ்கி கூறிச் சென்று நூறாண்டுகள் கழிந்த பிறகே, மனிதன் தன் சொந்த எல்லைகளை மீறி விண்வெளி சென்றான்.

இன்று சந்திர மண்டலத்திலும் செவ்வாய் கிரகத்திலும் மனிதர்கள் வாழ்வதற்கும் அதற்கான வீடுகள் கட்டுவது குறித்தும் அங்கே தோட்டங்கள், பூங்காக்கள் அமைக்கும் முறை குறித்தும் அமெரிக்க விஞ்ஞானிகள் பேசத் துவங்கி காலம் பலவாச்சு; நாமும் அவர்களுடன் இணைந்தாச்சு. செவ்வாயில் தண்ணீர் இருக்கிறதாம்; இங்கு இருப்பவற்றை ஒட்டுமொத்தமாய் ஆழ்குழாய்த் துளையிட்டு உறிஞ்சி முடித்தாயிற்று. ஏன் அது அங்கே இருக்கிறது? அதற்காகவே புறப்படத் தயாராகி விட்டோம்.

விண்வெளியில் வெறுமனே ’கால் பதித்து’ வரவோ, அல்லது அங்கேயே தங்கி ‘குடும்பம் நடத்தவோ’ –எப்படியாக இருந்தாலும் சரி. விண்வெளிக்குச் செல்ல வெண்டுமென்றால், மனிதன் பூமியின் சூழலைத் தன்னுடன் கூடவே எடுத்துச் சென்றால்தான் அங்கு பிழைத்திருக்க முடியும். ஏனென்றால் மனிதன் ஒரு பூமி ஜீவி. பூமித் தாயுடன் தன்னைப் பிணைத்திருக்கும் தொப்புள்கொடியை அறுத்தெறிந்து விட்டு விண்வெளிக்குச் சென்று வாழ அவனால் முடியாது. மனிதனின் ஜீவநாடியாக விளங்கும் ’தாய் பூமி’ யின் மகத்துவம் குறித்து ஓர் ஆதிகால கிரேக்கக் கட்டுக்கதை இப்படிச் சொல்கிறது:

 ஆந்தேயூஸ் அவனது தாயாகிய பூமியை விட்டு நீங்காத வரை அவனை வெற்றி கொள்வது குறித்து எத்தகைய மாவீரனாலும் நினைத்தே பார்க்க முடியாது. கடுமையாகப் போரிடும் மகன் களைப்புற்றுத் தன்னைத் தழுவிக் கொள்ளும்போதெல்லாம், அவனின் அயர்வைப் போக்கிப் புதிதாய் அசுர பலமூட்டி வீறு கொண்டெழச் செய்வாள் தாய் பூமி. அப்படியொரு மந்திரத் தொடர்பு அவனுக்கும் பூமிக்கும். ஹெர்குலிஸ் அவனைக் காற்றிலே உயரே உயரே எறிந்து, அந்த மந்திரத் தொடர்பை அறுத்த போதுதான் வலுவிழந்து தளர்ச்சியுற்ற ஆந்தேயூஸைக் கொல்ல முடிந்தது.

இயற்கையின் எதிர்காலம் மீது காட்டப்படும் அக்கறை மனித குலத்தின் எதிர்காலம் மீதான அக்கறையாகும். இலாப வெறி கொண்டவர்களோ இயற்கையின் முடிசூடா மன்னர்களாய்த் தம்மைக் கற்பிதம் செய்து கொண்டு, இயற்கை வளங்களைக் கண்மூடித்தனமாகச் சூறையாடுகிறார்கள். இயற்கை அதன் மேல் அடையப்படும் ஒவ்வொரு வெற்றிக்கும் பழி வாங்குகிறது. இயற்கையின் சமநிலைச் சீர்குலைவினால், இயற்கையின் சீற்றங்களினால் நாள்தோறும் ஆயிரக் கணக்கானோர் மடிகிறார்கள். குழந்தைகளில் பலர் அவர்களின் முதலாமாண்டு பிறந்த நாளைக் காணாமலேயே செத்தொழிகிறார்கள். இயற்கையை அன்புடனும்  அறிவுடனும் அணுகாதவர்கள், நம் குழந்தைகளுக்கு எதிரிகளாவர். இயற்கையின் மீது அக்கறையுள்ள எஜமானனாக இல்லாதவர்கள் கர்ப்பத்திலிருக்கும் சிசுவையும் கொல்கிற பாவிகளாவர். 

எஜமானன் – அடிமை என்று வர்க்கங்கள் தோன்றியபோதே இயற்கையின் அறிவார்ந்த பயனீடும் இல்லாமல் போனது. உணவு உடை உறைவிடம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாதவர்கள், சாவின் விளிம்பு வரை உழைக்க நிர்பந்திக்கப்படுபவர்கள் ’சூழ்நிலைக் களங்கம்’ பற்றி வருந்தியழவும் வாதம் புரியவும் கனவிலும் நினைத்துப் பார்ப்பதில்லை.

தான் வேலைக்கு அமர்த்திய மற்றொரு மனிதனை – அடிமையை – மிக இழிவாய் நடத்துகிற எஜமானன் இயற்கையையும் ஒரு தாழ்ந்த அடிமையாய்க் கருதுகிறான். என்றுமே வாழாத தம்மை மறுபடியும் சாகடிக்கவே எஜமானன் முயல்வதால், எஜமானன் மீதான கோபத்தை நிலத்தின் மேல் கடப்பாரையாய், மரத்தின் மேல் கோடரியாய் அடிமை சுழற்றி வீசுகிறான். தமக்கே ஓர் எதிர்காலம் இல்லாததால் இயற்கையின் எதிர்காலம் பற்றியோ, அழகுச் சூழல் அழிவது பற்றியோ அவன் கவலைப்படுவதில்லை. மனித சமூகத்தின் சமச்சீரின்மை இவ்விதம் இயற்கைக்கு விரோதமான குரூரமான அறிவற்ற மனப்பான்மையை வளர்த்து விடுகிறது. இந்தச் சமூகப் பகைமைகளுக்குத் தீர்வு காணாத வரை, இயற்கை – மனிதன் இடையிலான உறவில் முரண்பாடு ஒழிந்து லயம் எய்தப்படுவது சாத்தியமேயில்லை.  

இயற்கையுடனான லயம் கெட்டு மனிதன் சிருஷ்டிக்கும் கலை அவனுடைய வாழ்வு ஊனமடைந்திருப்பதையே குறிக்கும். இயற்கையுடன் முரண்பட்டு இயல்பு வாழ்க்கையிடமிருந்து  தனிமைப்படும் கலை வளர்ச்சியைக் குறிப்பதாகாது. கலாபூர்வமான படைப்புகள் யாவும் பிரதிபலிப்பது எதார்த்தத்திலும் அதன் உள்ளேயும் காணப்படும் அழகின் சேகரிப்புகளையே.

இன்னமும் தெளிவாகப் புலப்படாத சூனியத்தின் மீது கேள்விகளை எழுப்பும் அறிவியலுக்கு, ஏற்கனவே துலங்கி வரும் உண்மைகள் மீது கேள்விகளை எழுப்பும் கலை கண்டுபிடிப்புகளுக்கான உந்து விசையாகத் திகழ்கிறது.
 “நாளைய மறுநாளின் கவிஞர்கள், தங்களின் உவமைகளை உருவகங்களை ஒப்புமை அணிகளைத் தொழில்நுட்ப அறிவியலில்தான் தேடுவார்கள். தொழில் நுட்ப வளர்ச்சியால் நம் புலன் உறுப்புகள் கவர்ந்திழுக்கப்பட்டு, இயல்பான சிந்தனை முறை மாறும். புறப்பொருட்கள் அவற்றின் தனிப் பெயர்களை இழந்து, உருவமற்ற கருத்தியல் கோட்பாடுகளே நமது அந்தரங்க வாழ்க்கையை இயக்கும். இந்தச் சிந்தனை முறை நுண்ணியதாய் உலகு தழுவியதாய் இருக்கும். வண்ணங்களற்ற வெறுமையான சிந்தனை இடுகுறிகளால் நிறைந்துள்ள எலக்ட்ரானிக் மூளையை மனிதன் பெறுவான்.”

இவை இயற்கை – மனித உறவில் லயம் கெட்டழிந்தவர்களின் பிதற்றல்களே. உண்மையில், மனித சிந்தனைத்திறன் இலட்சோப லட்சம் மெல்லிய இழைகளால் இயற்கையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இயற்கைச் சூழலுடன் அறுக்க முடியாத பந்தத்தைக் கொண்டவனாகவே மனிதன் இருக்கிறான். ஏனெனில் இயற்கைச் சூழலுடன் இணைந்து வளர்ந்துள்ள ‘இயற்கையின் விளைபொருளே’ மனிதன். 

எலெக்ட்ரானிக் மூளை கூட மனித மூளையின் சிருஷ்டிதான். இன்னும், எண்ணிலடங்கா ரகசியக் குவியல்களும் வினோதங்களும் நிறைந்த புதிராகவே மனித மூளை திகழ்கிறது. தன் இறுதி நாட்களில் அழகை ரசிப்பது சலித்துப் போன நிலையில் டார்வின் இப்படிச் சொன்னார்:

“மீண்டும் புதிதாக வாழ்வேனாகில் அழகு – ரசனைத் திறனுடன் சம்பந்தப்பட்டிருக்கும் மனித மூளையின் பகுதிகளை, அவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்வேன். மனத்தில் சந்தோஷத்தை இழக்கும்போதுதான் அழகைச் சுவைத்தறியும் திறனை இழந்து போகிறோம். இயற்கை அழகு நம்மில் எழுப்பும் உணர்ச்சிகள் மழுங்கடிக்கப்படும்போது நேரும் ‘ரசனை இழப்பால்’ நமது மூளையின் அறியும் திறனும் குணநலமும் பெரும்பாலும் பலத்த பாதிப்புக்குள்ளாகும்.”
இயற்கை அழகு காணக் கிடைக்காத ஒன்றாகிப் போனால், ‘பட்டணத்து பூதங்கள் நிறைந்த கான்க்ரீட் வனத்திலிருந்து‘ தப்பித்து ஓடத்தானே விரும்புவோம்? இயற்கையை அழித்து எழுப்பப்படும் செயற்கை உலகின் சௌந்தரியங்களைக் (!) காண்பதில், சூம்பிப் போன போன்சாய் மரங்களையும் சுவர்ப் படங்களில் விரியும் இயற்கைக் காட்சிகளின் நகலையும் காண்பதில் மனித மனம் நிறைவு கொள்ளுமோ? திசைகள் நான்கிலும் சூழ்ந்திருந்த இயற்கை வண்ணங்களின் ரசம் அனைத்தையும் இழந்து விட்ட வெற்றுக் கண்ணாடியாய்த் தொழில் நுட்பம் மானுடச் சூழலை மாற்றிய பின், இயற்கைக்கு அந்நியர்களான இச்சூழலை விட்டு, ‘பூக்களின் குழந்தைகள் நாங்கள்’ என்ற அறிவிப்புடன் தொலைதூரப் பிரதேசங்களுக்கு இயற்கை அன்னையின் மடியிலமர்ந்து களித்திருக்க நாகரிகக் கூட்டம் செல்கிறது.  

இந்த பூமி முழுவதையும் தொழில் நுணுக்கம் ஆதிக்கம் செலுத்தும் நாள் வரலாம். ஆனால், சமூகம் மீதான தொழில் நுணுக்க ஆதிக்கம் அதிகரிக்க, அதிகரிக்க, இயற்கை மென்மேலும் அதிகமாகவே தேவைப்படும். மனிதனின் சொந்தக் கரங்களின் மாபெரும் சிருஷ்டியாகிய செயற்கை – உலகின் இரண்டாவது இயற்கையின் – முக்கியத்துவத்தையும் குறைத்துக் கூறுவதற்கில்லை.

தொழில் நுட்பம் பார்வையற்றவனுக்குக் ‘காணும் – கால்’ அல்லது கண்ணாடியாய் இருக்கிறது. மனநோயாளிக்கு மனநல மருந்தகமாய் விளங்குகிறது. இவ்வசதிகளை இழக்க நாம் விரும்ப மாட்டோம். ஆனால், தொழில் நுணுக்கத்தால் இயற்கையின் பணிகளனைத்தையும் ஏற்றுச் செய்ய இயலாது. ஒரு பழமொழி சொல்வது போல, ‘அரசனுக்கு உரியவற்றை அரசனுக்குக் கொடு; ஆண்டவனுக்கு உரியவற்றை ஆண்டவனுக்குக் கொடு.”
மாறாக, இயற்கையையும் தொழில் நுட்பத்தையும் – கலையையும் அறிவியலையும் ஒன்றிற்கொன்று போட்டி சக்தியாக நிறுத்துகிற அந்த விநாடியிலிருந்தே அவற்றின் பயன்பாடு அறிவுபூர்வமற்றதாகி விடுகிறது. இயற்கைக்கும் கலைக்கும் அனுசரணையாக இல்லாமல் தனது தனிச் செல்வாக்கை நிலை நிறுத்த முயலும் தொழில் நுட்ப – அறிவியலால் மனித வாழ்வின் ஆதாரமான மகிழ்வுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, 
புகைப்படக்கலையின் பிரமாண்டமான வருகை ஓவியக் கலையை ஒழித்துக் கட்டி விட்டதா என்ன ? ராக் இசையின் தோற்றம் நம் தோட்டத்துக் குயில்களைச் சுட்டுத் தள்ளவா எழுகிறது? கேமரா, காட்சிகளை அழகிய முறையில் நகலெடுத்துத் தருகிறது. ஓவியத்திலோ ஒரு கலைஞனின் ஆன்மா சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
தானே சிந்திக்கும் திறனற்ற ஒரு செயற்கை ஜீவனால், கம்ப்யூட்டரால் நம் இதயத்தை உருக வைக்கும் ஒரு காதல் கவிதையை எழுதித் தர இயலுமா? அது கவிதை எழுதவும் மனிதர்களே சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது. கலைத்துவத்தின் நகல் செய்ய முடியாத தனித்தன்மை அதற்கில்லை.

குளிரூட்டப்பட்ட அறைகள் இதமான குளிர்ச் சூழலை அளிக்கலாம். ஆனால், அருவியில் குளித்து  சோலை புகுந்து மலர்களின் வாசத்தோடு நம்மைக் கடக்கும் தென்றலை, அது தரும் சுகத்தை எந்தக் குளிரூட்டியாலும் வழங்க இயலாது. அறிவியல் தொழில்நுட்பம் ‘மனிதாபிமானம்’ கொண்டதாக இருக்க வேண்டும் என்பதும், இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே முரண்பாடுகள் ஏதுமற்ற இணக்கம் உருவாக வேண்டும் என்பதும் இன்றைய காலத்தில் வெற்று முழக்கமல்ல; மனிதனை, வாழ்க்கையை, எதிர்காலத்தை நேசிப்பவர்களின் வேண்டுகோள்; கட்டளை…!

அம்ருதா, ஜூன் 2015     

பா.ஜீவசுந்தரி